Monday, October 08, 2012

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 3


காலை உடைத்த காஞ்சனா….


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

படுக்கையறையின் வெளியே பரபரப்பான பேச்சுக்குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த நான் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க இரவு மணி பத்து என அது காட்டியது. படுக்கையில் இருந்து எழுந்தவன் வெளியில் சென்று பார்க்க மணி,சிங், சாஜன் மூவரும் ஹாலில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.என்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திய சிங் எழுந்து சமையலறைக்குள் சென்று விட்டார். சாஜனும் அவர் பின்னாலே சமையலறைக்குள் நுழைந்தான். முகத்தைக் கழுவி விட்டு துண்டால் துடைத்துக் கொண்டே ஹாலில் வந்தமர்ந்த என்னிடம் ”என்ன சார், நல்ல தூக்கமா..” என்று மணி கேட்க “ஆமா மணி. நேற்று ராத்திரி டிரெயினில் தூக்கமேயில்லை. அதான் அசதியில் தூங்கிவிட்டேன்” என்றேன்.”சரியான பசி மணி.. பக்கத்தில நல்ல ஹோட்டல் எங்கே இருக்கு சொல்லு. போய் சாப்பிட்டு வரலாம்.” என நான் கேட்க “ஏன் சார்… ஹோட்டல்லாம் போய்க்கிட்டு… சிங் சார் சிக்கன் பிரியாணி பண்ணிட்டு இருக்கார். சூப்பரா இருக்கும்.இங்கேயே சாப்பிட்டுடலாம்” என்றான் மணி.

”ஏன் மணி சிங் மூஞ்சி கொடுத்தே எதுவும் பேச மாட்டேன்கிறார். என்கிட்டே மட்டும்தானா… இல்லை எல்லோர்ட்டேயும் இப்படித்தானா..” என்று மதியத்திலிருந்தே என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை மணியிடம் நான் கேட்டவுடன் “இல்லை சார்..அவர் நல்ல டைப். ரொம்ப வருஷமா இங்கே இருக்கார். திடீர்ன்னு வேற ஊருக்கு மாற்றல்ன்னதும் டல்லாயிட்டாரு. நீங்க வேற வந்துட்டீங்களா..அதான் ரொம்ப வருத்தாமாயிருக்கார்…” என அவன்  கூறினான். “என்னப்பா நான் வந்ததுனாலேயா…” என நான் குழப்பத்துடன் கேட்க,”ஆமா சார்…நீங்கதானே அவரை மாற்ற வந்த ஆளு அதான் உங்ககிட்டே எதுவும் பேசமாட்டேன்கிறார்.” என்று காரணத்தை மணி போட்டுடைத்தான்.

இந்த பிரச்சினையை இதற்கு மேல் விட்டால் தேவையில்லாத குழப்பம்தான் என முடிவெடுத்த நான் கிச்சனுக்கு சென்று,”சிங்,கொஞ்சம் ஹாலுக்கு வாங்க. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்” என்றேன்.அவர் ஹாலுக்கு வந்ததும்,”தோ பாருங்க சிங்.நான் புதுசா இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கேன். என்னை இந்த சைட்டுக்கு போங்கன்னு சொன்னதாலே இங்கே வந்தேன். என்னாலே உங்களுக்கு மனக்கஷ்டம் வேண்டாம்.நான் இப்பவே சென்னை ஆபிஸ் பிராஜெக்ட் மேனேஜர்ட்ட பேசி இந்த சைட் பிடிக்கலை.வேற சைட்டுக்கு மாத்திக் கொடுங்கன்னு கேட்கிறேன்.நீங்க இங்கேயயே கண்டினியூ பண்ணுங்க” எனவும்,” இல்லை சார்.இது மேலிடத்துல நாலைந்து மாசம் முன்னாடியே முடிவு பண்ணது தான். நீங்க  இல்லைன்னாலும் வேற யாராவது வந்தா நான் போக வேண்டியதுதான். உங்க மேலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை.ரொம்ப நாள் பழகின இடத்தை விட்டுப்போறதனாலே மனசு சரியில்லை. அதான் உங்ககிட்டே மட்டுமில்லை… ரெண்டு மூணு நாளா யார்ட்டயுமே  நான் சரியா பேசலை. மணியும், சாஜனும் கூட அதனால்தான் அவங்க ரூம்ல இருந்து என்னைப் பார்க்க இந்த நேரத்தில் வந்திருக்காங்க.. வேறெந்த காரணமும் இல்லை.” எனத் தெளிவாகக் கூறி “பிரியாணி ரெடியாயிடுச்சு. வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்.” என அன்புடன் அழைத்தார். சாப்பிட்டு முடித்தவுடன் “ சார் நீங்க ரெஸ்ட் எடுங்க.நாளைக்கு காலைல நான் கிளம்பறதனோலே லோக்கல் ஃபிரெண்ட்ஸ் எல்லோரையும் பார்த்து சொல்லிட்டு வந்துடுறேன்” என்று கூறி விட்டு மணி மற்றும் சாஜனுடன் வெளியே கிளம்பிச் சென்றார்.

சிறிது நேரம் டி.வி பார்த்து விட்டு நானும் உறங்கச் சென்றேன்.காலையில் ஒன்பது மணிக்கு சென்றால் போதும் என்பதால் கொஞ்சம் மெதுவாக எழுந்து குளித்து கிளம்பினேன். அதற்குள் இரவு வேலைக்குச் சென்ற பாண்டேவும், தேசிங்கும் வந்து குளித்து கிளம்பி ராஜேஷ் சிங்கை வழியனுப்ப அவருடன் இரயில் நிலையம் செல்ல தயாராய் இருந்தனர். எல்லோரும் கிளம்பி சாரஸ்தா வர அங்கு பணிக்கு செல்ல நின்று கொண்டிருந்த மணியும்,சாஜனும் எங்களை நோக்கி வந்து ராஜேஷ் சிங்கை கைகுலுக்கி வழியனுப்பினர். அந்த நேரம் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேருந்தும் வந்து விட பணிக்குச் செல்ல வேண்டிய நாங்கள் மூவரும் ஓடிச்சென்று ஏறினோம்.கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து திரும்பி பார்த்த போது கவாண்டே பைக்கை நிறுத்தி சிங்குடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது.

நாங்கள் அலுவலகம் சென்ற சிறிது நேரத்தில் கவாண்டேவும் வந்து விட நான் செய்ய வேண்டிய பணிகள் பற்றி விளக்கி கூறி பின் அன்று முழுதும் அனைத்து டிபார்ட்மெண்டுகளுக்கும் அழைத்துச் சென்று முக்கிய அலுவலர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். ஆராய்ச்சிகத்தில் மின்சாரம் பெறும் சப் ஸ்டேசன் முதல் மின்சார விநியோகம் மற்றும் எல்லா டிபார்ட்மெண்டிலும் இருந்த ஃபர்னஸ்,ஓவன், பலதரப்பட்ட மோட்டார்கள் போன்ற மின் இயந்திரங்கள், ஜெனரேட்டர், மின் விசிறிகள், விளக்குகள் போன்ற மின்சாரம் சம்பந்தப்பட்ட மின்சாதனங்கள் பராமரிப்பு அனைத்தும் எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு என்பதால் அந்த வாரம் முழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக மணியை உடன் அழைத்துச்சென்று அங்குள்ள மின் சாதனங்கள், இயந்திரங்கள், விளக்குகளின் இணைப்புகள் வரைபடத்தில் குறிப்பிட்டது போன்று இருக்கிறதா, அல்லது யாராவது ஏதாவது மாற்றம் செய்துள்ளார்களா என சரிபார்த்தேன். மதியம் கேண்டினில் உணவு, காலை,மாலை ஆராய்ச்சி நிறுவன பேருந்தில் சென்று திரும்புதல் என அந்த வாரம் கழிந்தது.

 சனி, ஞாயிறு ஆராய்ச்சியகம் விடுமுறை என்பதால் உள்ளே நாங்களும், பாதுகாப்புபணியில் இருந்த இராணுவ வீரர்களும் மட்டுமே இருந்தோம். கவாண்டேவும் பத்து மணியளவில் வந்து அரைமணி நேரம் இருந்து விட்டு போய் விட்டார். மதியம் மூன்று மணியளவில் சப்ஸ்டேசன் பக்கமாக பாரா வந்த செக்யூரிட்டி இராணுவ வீரரொருவர் “ என்ன மணி, கிரிக்கெட் விளையாடப் போகலாமா…” என அழைக்க உடன் பணிக்கு இருந்த உள்ளூர்க்காரரிடம், “நீ இங்கிருந்து பார்த்துக் கொள். ஏதாவது பிரச்சினை என்றால் என் செல்லில் கூப்பிடு.உடனே வந்து விடுவோம்.” என்று கூறி விட்டு “ சார். வாங்க கிரிக்கெட் விளையாடப் போகலாம்” என்று என்னையும் அழைத்தான்.”இல்லை மணி. நீன்னா போ. நான் இங்கேயே இருக்கேன் என்றவனிடம்,” சார், இப்பவே மூணு மணி தாண்டியாச்சு. போய் ஒரு மணி நேரம் விளையாடிட்டு அப்படியே கிளம்ப சரியா இருக்கும். நீங்க விளையாட வராட்டாலும் சும்மா உட்கார்ந்து வேடிக்கையாவது பாருங்க.வாங்க..வாங்க….” என்று மணி தொடர்ந்து வற்புறுத்த நானும் அவனுடன் கிளம்பி வெளிச்சுற்று சுவருக்கு அருகே இருந்த விளையாட்டு மைதானம் வந்தோம்.

மணி அவர்களுடன் இறங்கி விளையாட நான் மைதானத்தின் ஒரு பக்க எல்லையில் இருந்த மரத்தின் அடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து பேர் மட்டுமே விளையாடுவதால் ஆளுக்கு இரண்டு ஓவர் பேட்டிங். மற்றவர்கள் பவுலிங், ஃபீல்டிங். இரண்டு ஓவருக்குள் அவுட்டாகாமல் அதிக ரன் எடுப்பவரே வின்னர். மற்ற விதிமுறைகள் வழக்கம் போல.ஆட்டம் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த நேரத்தில் நான் அமர்ந்திருந்த திசையை நோக்கி ஒருவர் ஓங்கி அடித்த பந்து என்னைத் தாண்டி வெகுதூரம் செல்ல என்னை எடுத்துத் தருமாறு கேட்டுக்கொண்டு அவர்களிடமிருந்த மற்றொரு பந்தை வைத்து விளையாட்டைத் தொடர்ந்தனர்.

பந்து விழுந்த இடத்தை நான் பார்க்காததால் உத்தேசமாக தேடிக்கொண்டு சுற்றுச்சுவரின் உள்பக்க எல்லை வரை வந்துவிட்டாலும் புற்களும், புதர்களும், சிறுகுறு செடி, கொடிகளுமாய் அடர்ந்திருந்ததால் பந்து கன்ணில் படவேயில்லை.அப்போது சற்றுத்தள்ளி சடசட,சரசரவென வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்க நரியோ, பாம்போ அல்லது வேறெதுவும் காட்டுவிலங்கோ என பதட்டமடைந்து மைதானம் நோக்கி திரும்பி நடக்கத்தொடங்கியவனை மேலும் பயந்து பதறவைத்தாள் திடீரென என்முன் வந்து வழிமறித்து நின்ற காஞ்சனா.

                                                            ( தொடரும் )
                                        
                                   பாகம் 4

Monday, October 01, 2012

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 2


கடந்த எட்டாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியின் அனுபவப் பகிர்வே காலை உடைத்த காஞ்சனா….ஆகும்.


முதல் பாகமான  பாலாப்பூர் சாரஸ்தா படித்துவிட்டு பின் இரண்டாம் பாகமான இங்கு தொடரவும்.


பாகம் 2 ஆராய்ச்சி நிறுவனமும், அரசாங்க விதிகளும்….

என் அதிர்ச்சிக்கு காரணம் வரவேற்பறையில் இருந்த அதே பெண் கேமராவை சரிசெய்தவாறு புகைப்படம் எடுக்கத் தயாரானதே. ஆம். அந்தக் கடையில் அந்தப் பெண்தான் ஆல் இன் ஆல் அழகு ராணி. சுருக்கமாகச் சொன்னால் ஓனர் கம் ஊழியை.. “என்ன சார் எப்படி எடுக்கணும். கோட் போட்டா அல்லது சாதாரணமாகவா...” என்று இந்தியில் கேட்டவளிடம்,    ”சாதாரணமாத்தான்…” என பதில் கூறினேன். குறுகுறு சிரிப்புடன் கூடவே வந்து நின்ற பாண்டே என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியவாறு  “எப்படி…” என்ற பாவனையில் தலையை அசைத்தான். போட்டோ எடுத்து முடித்து காப்பி வாங்குவதற்காக காத்திருந்த பத்து நிமிடமும் பாண்டே அவளைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். 

ஒரு வழியாக போட்டோ வாங்கிக் கொண்டு சாரஸ்தா வந்து ஷேர் ஆட்டோவில் ஏறி சுமார் பத்து கிலோமீட்டர் பயணம் செய்து இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு துறையின் அதிமுக்கிய ஆராய்ச்சி நிறுவனம் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்த இடத்தில் இறங்கினோம்.சரியான பொட்டல் காடு. கண்ணில் பட்டவரை ஆள் நடமாட்டமே இல்லை.ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்டை போன்ற மதில் சுவரும் பிரமாண்டமான இரண்டு பெரிய இரும்புக் கதவுகளும் அந்த இடத்தின் முக்கியத்துவத்தை சொல்லாமல் சொல்லின. கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது “கோன் ஹை” என்ற மிரட்டலான குரல் மிரள வைத்தது.


காம்பவுண்ட் சுவரினுள் வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத வகையில் அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் இருந்து எழுந்து வந்த இராணுவ வீரரொருவர் “நான்தான்” என்று கூறிய பாண்டேயிடம் “ஒருமணி நேரம் முன்னாடிதானே வேலை முடித்துச் சென்றாய்...ஏன் திரும்பி வந்தாய்… இவர் யார்... எங்கே அழைத்துச் செல்கிறாய்..” என கேள்வி மேல் கேள்வியாய் அடுக்கினார்.”இவர் புதிதாக வந்துள்ள பொறியாளர். இடம் தெரியாது என்பதால் கேட் பாஸ் போட்டு உள்ளே அழைத்துப் போக வந்தேன்” என்று பதறாமல் பாண்டேவும் பதில் கூற உள்ளே செல்ல அனுமதி தந்தார்.
காட்டு மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருந்த சாலையில் வழியில் இருந்த விருந்தினர் இல்லம் மற்றும் விளையாட்டு மைதானத்தைக் கடந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற போது இன்னொரு காம்பவுண்ட் சுவரும் பசுமையான பின்னணியில் ஆராய்ச்சியகத்தின் பல கட்டடங்களும் கண்ணில் பட்டன. நுழைவு வாயிலின் அருகில் இருந்த செக்யூரிட்டி அலுவலகம் சென்று தற்காலிக நுழைவுச்சீட்டு எடுத்து மின்சாரத்துறையின் கட்டிடம் சென்றோம். அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலாளர் கவாண்டே மின்துறையின் உயரதிகாரியான திரு.மாதவராவிடம் நேர்முகத்தேர்விற்காக அழைத்துச் சென்றார்.ஆம்.ஏற்கனவே எங்கள் நிறுவனம் பலகட்டத்தேர்வுகள் முலம் என்னை தேர்வு செய்திருந்தாலும் ஆராய்ச்சியக விதிப்படி அவர்களுக்கு திருப்தி இருந்தால் மட்டுமே அங்கு பணியில் சேரமுடியும். 
 மாதவராவும் அவரது உதவியாளர் சீனிவாசராவும் எனது சான்றிதழ் நகல்களைப் பார்வையிட்டு அனுபவ ரீதியாகவும், சம்பிராதாயகமாகவும் பல கேள்விகள் கேட்டு திருப்தியடைந்தவர்களாய் கவாண்டேவைப் பார்த்து தலை அசைக்க உடனே அவரும் எனது புகைப்படம் ஒட்டிய நிரந்தர அனுமதி நுழைவுச்சீட்டில் கையொப்பமும், முத்திரையும் வாங்கிக்கொண்டார். பின் அங்கிருந்து வெளியே வந்ததும் “உணவு வேளை ஆகி விட்டது. நீங்கள் இருவரும் கேண்டீன் சென்று சாப்பிட்டுவிட்டு அப்படியே இவரை கொண்டு போய் டிபார்ட்மெண்டில் விட்டுவிட்டு நீ கிளம்பு. நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்” என்று கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் கவாண்டே கிளம்பிச் சென்றார். 
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பலரும் பணி புரியும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கேண்டின் என்பதால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், விசாலமாகவும் இருந்தது. வரிசையில் நின்று உணவை வாங்கிக் கொண்டு எங்களைப் போன்ற தனியார் நிறுவன ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேல்மாடிக்கு பாண்டே அழைத்துச் சென்றான்.அந்த விரிந்து பரந்த அறையினுள் நுழைந்தவுடன் சுற்றும், முற்றும் பார்த்த பாண்டே எங்கள் நிறுவன சீருடை அணிந்து வலது கோடி சாப்பாட்டு மேஜைகளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோர் நோக்கி அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி விட்டு சாப்பிடத் தொடங்கினோம்.சாப்பிட்டு முடித்ததும் மணி, காந்தி,சாஜன்,மதி என்ற அந்த நால்வரிடமும் என்னை அலுவலகம் அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு பாண்டே கிளம்பிச் சென்றான். 
மற்ற மூவரும் அவரவர் பணிக்கு சென்றுவிட மணி மட்டும் என்னை அழைத்துக்கொண்டு சிறுகுன்று போல மேடான இடத்திலிருந்த மொத்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் மின்சாரம்  விநியோகிக்கும் சப்ஸ்டேசனுடன் இணைந்த எங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்.அந்த இடத்தில் இருந்து பார்த்தால் ஆராய்ச்சி நிறுவனத்தின் எல்லா இடமும் தெரியும் என்பதால் சப்ஸ்டேசனுக்குப் பின்னே உயரமான வாட்சிங் டவரும் இருந்தது.சப்ஸ்டேசன் உள்ளே பேனல் அறையில் அமர்ந்து லாக் புக் எழுதிக்கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்கவரிடம் “சிங் சார், இவர்தான் புதிதாக வந்திருக்கும் இன்சார்ஜ்…” என மணி என்னை அறிமுகப்படுத்த நிமிர்ந்து கூட பார்க்காமல் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார். மணியோ என்னை அங்கேயிருந்த இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்றுவிட்டான். அப்படியே அமைதியாக அரைமணி நேரம் கழிய திடீரென பக்கத்து அறையைப் பார்த்து “மணி. நான் கிளம்பறேன்..” என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்து சென்றார் அவர்.



அவருடன் வெளியே சென்று பேசி வழியனுப்பி விட்டு வந்த மணி “அவர்தான் ராஜேஷ் சிங். கவாண்டே சாருக்கு அடுத்த இன்சார்ஜ்” என்றான்.அந்த நேரம் வெளியே மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்க எட்டிப் பார்த்த மணி “கவாண்டே சார் வந்துட்டாரு..” என்றபடி எழுந்து நின்றான்.உள்ளே வந்த கவாண்டே “மணி, ஜூலை மாத டைம் சீட்டை எடுத்துக்கொண்டு போய் எல்லா டிபார்ட்மெண்ட் H.O.D.ட்டேயும் போய் கையெழுத்து வாங்கிட்டு வந்துடு.போறதுக்கு முன்னாடி நம்ம எல்லா சப்ஸ்டேசன் டிராயிங்ஸ், புது பிராஜெக்ட் ஃபைல் எல்லாம் இவர்ட்ட ஸ்டடி பண்ண எடுத்துக் கொடுத்திடு.” என்று சொல்லி விட்டு அவரது அறையினுள் சென்றார். அவர் சொன்ன எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டு மணி வெளியே சென்றுவிட நானும் அவற்றைப் பார்த்து குறிப்பெடுப்பதில் மூழ்கிவிட்டேன்.  
சுமார் ஐந்து மணியளவில் மணி திரும்பி வந்ததும் கிளம்பிய கவாண்டே “நீயும் என்னுடன் மோட்டார் சைக்கிளில் வா. அறையில் விட்டுச்செல்கிறேன்”. என்று கூறி அழைத்துச் சென்றார். காலையில் ஆட்டோ வந்த பாதையில் செல்லாமல் ஆராய்ச்சி நிறுவன வெளிச்சுற்றுச் சுவரின் பக்கவாட்டில் அமைந்திருந்த மண் குறுக்குச்சாலை வழியாக பாலாப்பூர் சாரஸ்தா வந்து தங்குமில்லத்தின் வெளியில் விட்டுவிட்டு கவாண்டே புறப்பட்டுச் சென்றார்.


நான் உள்ளே நுழையும் நேரம் இரவு வேலைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த பாண்டேவும், தேசிங்கும் உள்ளே இருந்த படுக்கை அறையை கூட்டிச் சென்று காட்டி “நீங்கள் இந்த அறை மற்றும் அலமாரிகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிச் சென்றனர். அவர்கள் சென்ற பின் காலையில் கொண்டு வந்து வைத்திருந்த பயணப்பெட்டி மற்றும் பைகளை படுக்கை அறைக்கு எடுத்துச் சென்று பிரித்து உடைகள் மற்றும் தேவையான பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு படுக்கையில் படுத்தவன் முந்தைய இரவின் நெடிய இரயில் பயண அலுப்பினாலும் பகலில் ஓய்வு எடுக்காத காரணத்தினாலும் அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன். திடீரென படுக்கை அறைக்கு வெளியில் பரபரப்பான பேச்சுக்குரல் கேட்கவே திடுக்கிட்டு உறக்கம் கலைந்து கண் விழித்தேன்.
(தொடரும்)

பாகம் 3 

Friday, September 28, 2012

காலை உடைத்த காஞ்சனா….


உருண்டோடும் இந்த பூமிப்பந்தில் ஆச்சரியங்களும், அதிசயங்களும் மட்டுமல்ல அமானுஷ்யங்களும் நிறைந்ததுதான் பாச,பந்தங்களால் பிணைக்கப்பட்ட மானிட வாழ்க்கை. ஏற்றம், இறக்கம் எத்தனையோ கொண்ட வாழ்வின் பல கட்டங்களில் நான் சந்தித்த பல அசந்தர்ப்பமான சம்பவங்களை ஏற்கனவே





போன்ற பதிவுகளில் பகிர்ந்துள்ளேன். கடந்த எட்டாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியும் மேலே குறிப்பிட்டவை  போன்ற ஒரு அனுபவப் பகிர்வே ஆகும்.
காலை உடைத்த காஞ்சனா….



பாகம் 1 – பாலாப்பூர் சாரஸ்தா


மின்னியலில் தொழில்நுட்ப படிப்பு முடித்து சென்னை சென்று வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தில் பணி நிமித்தமாக அவ்வப்போது இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் பத்தாண்டுகளாக பெரும்பாலும் தாய்த்தமிழ்நாட்டில்தான் பணி. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் ஆந்திர மாநில கிளைத்திட்டத்தில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்க 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி ஞாயிறன்று சென்னையில் இருந்து கிளம்பி தெலுங்கு தேசம் சென்றேன். ஹைதராபாத் இரயில் நிலையத்தில் இறங்கி கிளை மேலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டு செல்ல வேண்டிய இடத்தின் முகவரி வாங்கினேன். சென்னையின் தியாகராயநகர் போன்ற வணிக அங்காடிகள் நிறைந்த கோட்டி எனும் இடம் தாண்டி DRDO வழியாக பாலாப்பூர் எனும் ஊரை ஆட்டோ மூலம் அடைந்தேன்.  

பாலாப்பூர் இயற்கை வளம்மிக்க பசுமையான பல அழகான கிராமங்கள் சூழ்ந்த குடியிருப்புகள் நிறைந்த ஊர். பல சிறிய கிராமங்களும் கிளைச்சாலைகள், இணைப்புச்சாலைகளால் இணைக்கப்பட்ட நான்கு முக்கிய சாலைகளின் சந்திப்பாக (கூட்டு ரோடு) பாலாப்பூர் சாரஸ்தா (சார்+ரஸ்தா) இருந்தது. கிராமங்களில் இருந்து வரும் பால், அரிசி, கீரை, காய்கறிகள் சுத்தமாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதால் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் வேலை செய்யும் பலரும் பாலாப்பூரில் குடும்பத்தோடு தங்கி இருந்தனர். எங்கள் திட்ட அலுவலகம் இருந்த இடம் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் RCI செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் இருந்தது. எனவே எங்கள் நிறுவனமும் பாலாப்பூரிலே தங்கும் இடம் ஏற்பாடு செய்திருந்தனர். 

நான் தங்கும் இல்லத்தை அடைந்த போது மணி காலை ஒன்பது ஆகிவிட்ட படியால் அங்கு தங்கியிருந்த அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். அங்கு காத்திருந்த கிளை மேலாளரான கவாண்டே எனும் மராட்டியர் என்னைப் பார்த்தவுடன் “ஹிந்தி தெரியுமா” என்று கேட்கவும் “தோடா தோடா” என்றேன். இரவுப்பணிக்கு சென்ற இரண்டு பேர் வரும் வரை என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவர் அதில் வடமாநிலத்தை சேர்ந்தவன் போலிருந்தவனிடம் நான் குளித்து கிளம்பியவுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் போன்றவற்றோடு அலுவலகம் அழைத்துக்கொண்டு வருமாறு கூறிச்சென்றார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அவனது பெயர் நரேந்திர குமார் பாண்டே என்றும் தமிழ்நாட்டின் செஞ்சியைச் சேர்ந்த இன்னொருவனது பெயர் தேசிங்கு எனவும் அவர்களுடனான அறிமுகத்தின்போது அறிந்தேன். 

நீண்ட இரயில் பயணக் களைப்பிற்கு இதமான வெந்நீரில் குளித்து, கிளம்பிய நேரத்தில் தேசிங்கு காலை உணவாக உப்புமா செய்துவிட சாப்பிட்டுவிட்டு தேவையான சான்றிதழ்களோடு கிளம்பி சென்றோம்.கையில் புகைப்படம் இல்லாத காரணத்தினால் சாரஸ்தா அருகில் இருந்த ஸ்டூடியோவிற்கு பாண்டே அழைத்துச் சென்றான். “தங்கும் இடத்திலிருந்து சாரஸ்தா வரும் வழியில் பல புகைப்பட நிலையங்கள் இருக்க ஏன் இங்கு அழைத்து வந்தான்…” என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அழகிய இளம்பெண்ணே பதிலாய் இருந்தாள். 

கடைக்கு உள்ளே நுழைந்தவுடன் அந்த பெண்ணிடம் “க்யாஹை….கைஸாஹை….”என்று பேச ஆரம்பித்த பாண்டே என்னை புகைப்படம் எடுக்கும் அறைக்குள் சென்று தயாராகச் சொன்னான். அந்த அறையில் இருந்த பெரிய கண்ணாடி முன் நின்று தலைக்கேசம் சரியாக இருக்கிறதா எனப்பார்த்துக் கொண்டிருந்த போது வெளியில் பாண்டே அந்தப் பெண்ணுடன் சத்தமாக உரையாடுவதும் அவள் கலகலவென்று சிரிப்பதும் காதில் விழுந்தது. கைக்குட்டையால் முகத்தை லேசாக துடைத்து விட்டு கேமரா முன் இருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன் “போட்டோ எடுக்கலாமா…” என்ற குரல் கேட்டு நிமிர்ந்ததும் அதிர்ந்தேன்.

Tuesday, July 03, 2012

ம்ம்ம்முடியலை.....


 சூப்பர்மடபுரம்
மதுரையை மையமாக வைத்த மாபெரும் திரைக்காவியம்

Saturday, June 30, 2012

நெல்லைக்கு பெருமை சேர்க்கும் இன்னொரு புத்திசாலி சிறுவன் சந்துரு.

தரணி புகழும் தாமிரபரணி தண்ணீருக்கு என தனித்துவமான குணங்கள் பல உண்டு. ஏற்கனவே நுண்ணறிவுத்திறனில் உலகசாதனை படைத்த சாதனைச் சிறுமி செல்வி விசாலினியைப் பற்றி உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்கள் பதிவிட்டு பெருமைப்படுத்தியிருந்தார்.







திருநெல்வேலி: இசை, மொழி, கம்ப்யூட்டர் ஆன்லைன் தேர்வு ஆகியவற்றில் சிறுவயதிலேயே சாதனை மாணவராக திகழும் நெல்லையை சேர்ந்த சந்துரு, தமது 10 வயதுக்குள் 20 ஆன்லைன் தேர்வுகளில் எழுதி வெற்றிபெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாகஇருப்பவர் கார்த்திக். இவரது மனைவி லதா, இவர்கள் பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சந்துரு. 11 வயதாகும் சிறுவன் பாளையங்கோட்டை புஷ்பலதா, வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் ஆர்வமுடைய சிறுவன் , அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ஆரக்கிள், ஜூனிபெர் போன்றவை
நடத்தும் ஆன்லைன் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளார். வழக்கமாக கம்ப்யூட்டர் துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் எழுதும் திறன் கொண்ட சிசிஎன்ஏ நெட்வொர்க் தேர்வுகளையும், எம்.சி.பி., எம்.சி.டி.எஸ்., எம்.சி.பி.டி., ஆகிய ஆன்லைன் தேர்வுகளையும் தமது 10 வயதுக்குள்ளாக எழுதியுள்ளார். இது குறித்து நெல்லையில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்திவரும் சவுந்திரபாண்டியன் கூறுகையில், சிசிஎன்பி, சிசிடிபி எனப்படும் தேர்வுகளை இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது நிரம்பிய இர்டாஷா ஹைதர் என்ற மாணவர்தான் குறைந்த வயதில் எழுதியுள்ளதாக தகவல்கள் உள்ளன. எனவே அந்த வகையில் அதைவிடவும் வயது குறைந்த மாணவராக சந்துரு ஆன்லைன் தேர்வில் வெற்றிபெற்றுள்ளது சிறப்பிற்குரியது என்றார்.
சந்துருவின் தாயார் லதா கூறுகையில், ""சிறுவயதில் இருந்தே கணிதத்தில் ஆர்வமுடையவனாக இருந்தான். அபாகஸ் கணிததேர்வின் எட்டு லெவல்களையும் தமது ஒன்பது வயதில் முடித்து தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றான். தற்போது மொபைல் போனில் ஆன்ட்ராய்ட் தொழில்நுட்ப முறைகள் குறித்தும், கிளைவுட் கம்ப்யூட்டிங் குறித்தும் கற்றுவருகிறான். சந்துரு இசை, செஸ் விளையாட்டு களில் ஆர்வத்துடன் உள்ளான். மேற்கத்திய இசையில் லண்டன் இசைப்பள்ளியான டிரினிட்டியின் மூன்றாம் நிலை தேர்வில் வெற்றிபெற்றுள்ளான். தாமாகவே ஆர்வத்துடன் ஜப்பான், சீனா, பிரெஞ்ச் மொழிகளையும் கற்றுவருகிறான்'', என்றார்.