Thursday, August 20, 2015

பிரதமர் திரு.மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் - அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள்.


பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றி கேலி, கிண்டல் செய்யும்  நண்பர்கள் அறிவிலும், எண்ணத்திலும் தெளிவு கொண்டு சிறிது சிந்தித்தால் உண்மையை உணர்வார்கள்.  உண்மையான நாட்டுப்பற்று கொண்ட இந்தியர் அனைவரும் அறிய சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


பணம் இருப்பவன் தொழில் தொடங்குவான். பணம் இல்லாத படித்தவனும், படிக்காதவனும் அங்கு வேலை செய்வான் என்பது உலக நியதி. ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடுகளில் தொழிற்சாலைக்கு தேவையான இடம், மூலப்பொருட்கள், பணியாட்கள் அனைத்திற்குமே அதிக முதலீடு தேவைப்படும். எனவேதான் எந்த நாட்டில் இவையெல்லாம் மலிவாக இருக்கிறதோ அங்கு தொழில் தொடங்குகின்றன் பன்னாட்டு நிறுவனங்கள். எந்தவொரு இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூர், துபாய் மற்றும் பல வளைகுடா நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளை கொடுத்து முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சி கண்டன.


நம் பாரத நாடு விடுதலை அடைந்து 69 ஆண்டுகளாகியும் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுப்பார் யாருமில்லை. அப்படியே சில நிறுவனங்கள் வந்தாலும் அதிலும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆயிரம் ஊழல் செய்து நல்ல பல திட்டங்களை நாசமாக்கி விட்டனர். எனவேதான் எவரையும் நம்பாமல் தனி ஆளாக களம் இறங்கி, பல நாடுகளுக்கும் பயணம் செய்து பன்னாட்டு நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வருகிறார் மாண்புமிகு பிரதமர் திரு. மோடி.


இதுவரை 25 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்து பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. நமது நாட்டில் கூடிய விரைவில் பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்கட்டமைப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளன. கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டால் வேலை வாய்ப்பு பெருகும். உற்பத்தி தொடங்கிய பின்னும் உள்நாட்டில் வேலைவாய்ப்பும்,  பொருளாதார நிலையும் உயர்வு பெரும்.



இந்தியா இதுவரை இப்படிப் பட்ட செயல்திறன் மிக்க பிரதமரைப் பார்க்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த ஒரு கூட்டத்திலும் அவர் எழுதி வைத்து படிப்பதில்லை. சுதந்திர தின உரை மற்றும் சமீபத்தில் அமீரகத்தில் ஆற்றிய உரை போன்றவற்றில் அவரது எண்ணமும், ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன. அவரது எழுச்சியைக் கண்ட எதிர்கட்சிகள் தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்க முயல்கின்றன.


நாட்டின் முன்னேற்றம் என்ற குறிக்கோளில் தெளிவாக உள்ள பிரதமர் பல தடை தாண்டி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என்பது உறுதி. முதல் இரண்டு ஆண்டுகள் முதலீடு ஈர்ப்பு பயணம், அடுத்த  இரண்டு ஆண்டுகள் கட்டுமான கட்டமைப்பு பணிகள், வேலை வாய்ப்பு பெருக்கம், பொருளாதார மேம்பாடு என்று தீர்க்கமான திட்டங்களோடு செயல்பாடுகள் நடக்கின்றன. ஏற்கனவே பூகம்பத்தால் சிதையுண்டிருந்த குஜராத் மாநிலத்தை சீர்படுத்தி, முன்னேற்றம் அடையச் செய்த முறையைத் தான் இப்போது நாடு முழுதும் விரிவு படுத்தி உள்ளார்.


குஜராத் மாநிலத்தைப் போலவே அனைத்து மாநில மக்களும்      'நாட்டின் முன்னேற்றம் நமது முன்னேற்றம்' உண்மையை உணர்ந்து அடுத்து வரும் தேர்தல்களிலும் மோடி தலைமையிலான அரசினையே தேர்ந்தெடுப்பர். உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகிய பின் வேலை தேடி வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறையும். இந்தியாவிற்கு வேலை தேடி வெளிநாட்டு மக்கள் வருவர். இது நடந்து விடக்கூடாது, நம் நாடு வளர்ச்சி அடைந்து விடக்கூடாது என்று தான் பல அயல்நாட்டு தீயசக்திகள் உள்நாட்டு உளவாளிகள் மூலம் தேவையற்ற செய்திகளை பரப்பி மக்களை குழப்பி வருகின்றன. இணையத்தில் உலவும் மோடி குறித்த எண்ணற்ற கேலிகளும், கிண்டல்களுமே இதற்கு சாட்சி.


அன்பர்களே, நண்பர்களே 'நாட்டின் முன்னேற்றம் நமது முன்னேற்றம்' என்பதில் தெளிவு கொள்ளுங்கள். நீங்கள் உணர்ந்த உண்மையை உற்றார், உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி. வணக்கம்.

10 comments:

Unknown said...

Great 🙏👍

துபாய் ராஜா said...

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி திரு. Srividhya Mohan...

Anonymous said...

உன்மை

KILLERGEE Devakottai said...


வணக்கம் நண்பரே தாங்கள் சொல்வதுபோல நடந்தால் ஞாதி மதம் மறந்து அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் இதில் ஐயமில்லை.

valampuri said...

This is not true.may be you wrongly understand the investment policy. Sorry to said this.
Why India no money to invest in industry??

SingaiSiva said...

அருமையான தகவல் மற்றும் தொகுப்பு. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முனைப்பு என்பேன்.

அருமை நண்பரே!! தங்கள் அனுமதியுடன் என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன்.

நன்றி, சிங்கை சிவா(ஸ்).

SingaiSiva said...

I was listening to PM's speech in Dubai yesterday, exactly on these lines, I was analyzing the impacts. Awesome indeed!!
It takes guts to take on your opponent right at the his middle Head (without giving him any clue what's going on!!).
Let's wish NaMo succeeds in his endeavor as a strategic standpoint for several decades to come !! He would be remembered as the greatest Statesman that India had ever produced!! God save this Country !!
முதலில், ராஜீவ் காந்தி, சாம் பிட்ரோடா (இன்னும் சிலர் இருக்கலாம்), பிறகு பி.வி. நரசிம்மராவ், மன்மோகன்சிங் மற்றும் சிலர் (உதா: பி.சிதம்பரம் முதலானோர்) கூட்டணி துவங்கிவைத்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொதுத்துறையை தனியார் மயமாக்குதல் அல்லது பப்ளிக் பங்களிப்பு என்கிற த்வனியில் துவங்கிய மாற்றங்களின் விளைவைத்தான் (1984‍ to 1996 காலம்) இன்று நாம் அனுபவிக்கிறோம் என்பதை நினைவில் கொள்க.
இடையே எத்தனையோ ஊழல்கள், தில்லாலங்கடிகள், தில்லுமுல்லுக்கள் செவ்வனே நடந்தேறின என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
அவ்வப்போது இடையிடையே பாஜக ஆட்சிக்கு வந்தபோது ஆட்சியில் ஒரு ஸ்திரத் தன்மையும் நம்பகத் தன்மையும் வந்தது மறுக்க‌ இயலாத உண்மையும் கூட.
இன்று இந்த பாஜக அரசு விதைக்கும் விதை நீண்ட காலத்திற்கு பலன் தரும், உடனடித் தலைவலி நிவாரணியாய் அயோடெக்ஸ், பானடால், ஆக்ஸ் ஆயில் மாதிரியான வலி நிவாரணம் அல்ல இந்த அரசு செய்வது, முனைவது.
பொறுமையாய் 5 ஆண்டுகளும் அவதானித்து அதன் பின்னர் அவர் மீது அரசியல் ரீதியான சித்தாந்த ரீதியிலான தாக்குதல்களை அந்த 2019 தேர்தல் காலத்தில் யாரும் வைத்துக்கொள்ளலாம். அதற்குள் ஓரளவுக்கு நம்பகத் தன்மை இன்னமும் கூடியிருக்கும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிற பாலபாடம் எந்த துறைக்கும் பொருந்தும்.
68 ஆண்டுகள் பொறுத்த நமக்கு, கையாலாகாத்தனமாய் விட்டேற்றியாய் திண்ணைத் தூங்கிகளாய் இருந்த கூட்டம் இன்று ஒரு 60 மாதங்கள் பொறுக்க முடியாத அளவுக்கு மூலம் பித்தம் வாதம் வாட்டுகிறதோ? பொறுமை தேவை மக்களே.
மாற்றம் வரும், நிச்சயம் நாம் தலை நிமிருவோம்!!

'பரிவை' சே.குமார் said...

மோடியின் அரசியல் நாட்டில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்...
நல்ல பகிர்வு.

துபாய் ராஜா said...

//Anonymous Anonymous said...

உண்மை //

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே...

--------------------------------------------------------------------------

// KILLERGEE Devakottai said...

வணக்கம் நண்பரே தாங்கள் சொல்வதுபோல நடந்தால் ஜாதி மதம் மறந்து அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் இதில் ஐயமில்லை. //

நம்பிக்கையே வாழ்க்கை. நல்லது நடக்கும் என நம்புவோம் கில்லர்ஜி.

------------------------------------------------------------------------------

// valampuri said...

This is not true.may be you wrongly understand the investment policy. Sorry to said this.
Why India no money to invest in industry?? //

அன்பு வலம்புரி,நம் நாட்டில் குறிப்பிட்டு கூறும் அளவிலே தொழிலதிபர்கள் உள்ளனர். அவர்களும் தெரிந்த தொழில்களில் தான் ஈடுபட முடியும். ஏற்கனவே நமது நாடு ஜவுளி,சிமெண்ட் போன்ற பாரம்பரிய தொழில்களில் தன்னிறைவு பெற்று விட்டது. போக்குவரத்து வாகனங்கள் உற்பத்தியிலும்,ஐ.டி துறையிலும் தொடர்ந்து சாதித்தும் வருகிறோம். நாட்டின் வளர்ச்சி என்பது கால மாற்றத்திற்கேற்ப எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதுதான் கட்டுரையின் கருத்து.

-------------------------------------------------------------------------------------

// Singai Sivas said...

அருமையான தகவல் மற்றும் தொகுப்பு. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முனைப்பு என்பேன்.

அருமை நண்பரே!! தங்கள் அனுமதியுடன் என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன்.

நன்றி, சிங்கை சிவா(ஸ்). //

தளவருகைக்கும், தெளிவான, தரமான நீண்ட கருத்திற்கும் நன்றி நண்பரே சிங்கை சிவா(ஸ்). தாராளமாக முகநூல் மற்றும் கூகுள் +ல் பகிருங்கள்.நாட்டு முன்னேற்றத்தில் நம்மால் முடிந்த வரை பங்கு கொள்வோம். நல்லதை நாலு பேரிடம் பகிர்ந்து கொள்வோம்.
நன்றி. வணக்கம்.

---------------------------------------------------------------------------------------

// பரிவை சே.குமார் said...

மோடியின் அரசியல் நாட்டில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்...
நல்ல பகிர்வு. //

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி நண்பர் குமார். நம்மைப் போன்று வருவாய்க்காக குடும்பத்தைப் பிரிந்து அயல்நாடுகளில் வாழு(டு)பவர்களுக்கு தாய்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தணியாத தாகம் எல்லோரையும் விட அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

துபாய் ராஜா said...


மாற்றுக் கருத்துக்கள் கொண்ட நண்பர்கள் தரம் தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சிக்காமல், நாகரீகமான வார்த்தைகளில் எழுதினால் நிச்சயம் பிரசுரிக்கப்படும். ஏதோ பல நாடுகளில், பல துறைகளில் பணிபுரிந்த எனது அனுபவத்தின் துணை கொண்டு தகுந்த விளக்கங்களும் தரமுயன்றிருக்கிறேன்.கிணற்றுத் தவளையாய் நாம் இருந்தால் நமக்கு ஒரு வானமும், ஒரு பூமியும் மட்டும்தான் தெரியும்.ஆறு,ஏரி,குளம், ஊற்று, வாய்க்கால்,வடிகால்,கடல் பற்றிய எந்த அனுபவமும் ஏற்படாது. நாம் இருக்கும் குட்டையிலே குழம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.மேலே நண்பர் Singai Sivas கூறியிருப்பது போல் காலத்தால் கட்டுண்டிருந்தோம். அவிழ்க்க ஆள் வரும்போது ஆதரவு கொடுத்தால்தான் முயற்சி எடுப்பவர் முன்னேறி வருவர்.

எந்த ஒரு இயற்கை வளமும்,வரலாறும்,அனுபவமும் இல்லாத சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் முன்னேறியது எப்படி என்று அந்த நாடுகள் வளர்ச்சி அடைந்த விதத்தை படித்துப் பாருங்கள். சாதாரணமான நீர் சூழ்ந்த சதுப்பு நிலத்தைக் கொண்ட சிங்கப்பூரால் எந்த உபயோகமும் இல்லை என 1965ல் மலேஷியா கழட்டி விட்டது. அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது உலக அரசியல்வாதிகளில் ஒப்பற்றவரான மறைந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான் யூ 'என்ன செய்யப் போகிறோம், எப்படி முன்னேறப் போகிறோம் என்று தெரியவில்லையே. நம் எதிர்காலம் இருட்டாகிப் போய் விடுமோ' என்று தொலைக்காட்சிப் பேட்டியில் அழுது அரற்றினார். ஆனால் சில நொடிகள் தான். தலைவன் கலங்கினால் தம் நாட்டு மக்களும் மனம் குழம்புவர் என்பதை உணர்ந்து, உடன் மனம் தெளிந்து, வழியும் கண்ணீரைத் துடைத்து ' ஒத்துழைப்பு கொடுங்கள். நாட்டையும், நம் வாழ்வையும் உயர்த்திக் காட்டுகிறேன்' என்று சவால் விட்டு சாதித்தும் காட்டினார். உலக நாடுகள் எங்கும் சுற்றுப் பயணம் செய்து, முதலீடுகளை ஈர்த்து பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்பேட்டையாக சிங்கப்பூரை மாற்றி, வேலை வாய்ப்பை பெருக்கி தொழிலிலும், பொருளாதாரத்திலும் மேம்படுத்தினார்.திரு.லீ குவான் யூ மக்களிடையே ஆற்றிய ஏராளமான, எழுச்சி உரைகளை இணையம் மூலம் பாருங்கள்.கறுப்பு, வெள்ளை காலத்தில் குடிசைக் குடியிருப்புகளே அதிகம். தற்போது அனைவரும் அடுக்கு மாடிக்குடியிருப்பில் அனைத்து வசதிகளோடும். எந்த ஒரு மாற்றத்திற்கும் மக்களை தயார்படுத்தியதில் அவரது மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் பங்கு அளப்பரியது. உலகத்திலே வாழத்தகுந்த முன்னணி நகரமாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும், பொழுதுபோக்கு நகரமாகவும் சிங்கப்பூர் மாறியதில் மக்களின் பங்கும் மகத்தரியது.நமது நாட்டிலும் இது போன்று ஏதாவது அதிசயமும், அற்புதமும் நடந்திடாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாட்டையே நான் பொதுவில் பகிர்ந்தேன்.நன்றி. வணக்கம்.